search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி எம்பி"

    13 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கிடைத்திட தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். #kanimozhi #mkstalin #sterliteplant

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக் நகரில் தி.மு.க. காரியாலயத்தை திறந்து வைத்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    ஜனநாயகத்தை காக்க இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில் நான் வேட்பாளராக நிற்கிறேன். எனக்கு மக்கள் அமோக ஆதரவளித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    நீட் தேர்வை கொண்டு வந்த அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு நீதி கிடைத்திட தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழிற் சாலைகள், தொழில்வளங்கள் பெருக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார். #kanimozhi #mkstalin #sterliteplant

    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். #pollachiissue #kanimozhi

    தூத்துக்குடி:

    தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், வன்முறை சம்பவத்தை அரசும், போலீசும் மூடி மறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அது பெரிய அச்சத்தை உருவாக்கி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

    ஆனால் அரசாணையில் கூட பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அரசு வெளியிட்டுள்ளது. போலீசும் தொடர்ந்து பெயரை வெளியிட்டு வருகிறது. இது இனிமேல் யாரும் புகார் கொடுக்க கூடாது என்பதற்காக, அவர்களை அச்சுறுத்தவே செய்யக் கூடியதாக தோன்றுகிறது.

    7 ஆண்டுகளாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற சூழலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் எந்த பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. தற்போது வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

    இதுவரை விசாரணையில் தாமதம் செய்து போலீசும், அரசும் யாரை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தாண்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக கோர்ட்டு ஏற்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இருப்பதால் அவர்கள் பிரதமரை ‘டாடி’ என்று அழைக்கக்கூடிய நிலைக்கு சென்று உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கடம்பூர் அருகே ஓணமாக்குளத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய தாவது:-

    தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தின் எந்த உரிமைகளை இழந்தாலும், ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் அ.தி.மு.க. அரசு, தமிழ் விரோதிகளான பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமல் பா.ஜ.க. அரசு அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.

    அந்த கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை நடத்தும் தொழில் அதிபர்களை விட்டு விட்டு, சில ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் வாங்கிய மாணவர்களை கடனை திருப்பி செலுத்துமாறு பா.ஜ.க. அரசு மிரட்டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று மத்தியில் தி.மு.க. அங்கம்பெறும் ஆட்சியும் அமையும். அப்போது மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #pollachiissue #kanimozhi

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். #kanimozhi #pollachimolestation
    சென்னை:

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் “பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. 

    இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என பதிவிட்டுள்ளார். #kanimozhi #pollachimolestation
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தூத்துக்குடி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த கனிமொழியிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். #kanimozhi #mkstalin #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 25 பேர் விருப்ப மனு கொடுத்து இருந்தனர்.

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவார் என்பது கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவரை தவிர வேறு யாரும் விருப்ப மனுதாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி பெயரில் 33 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

    அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்திருந்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தினார்.

    தூத்துக்குடி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த கனிமொழியும் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் பங்கேற்றார்.

    கனிமொழியிடம் தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

    இந்த நேர்காணலின்போது முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உடன் இருந்தனர்.

    நேர்காணலில் திருநெல்வேலி தொகுதிக்கு 39 நிர்வாகிகளும் கன்னியாகுமரி தொகுதிக்கு 25 பேர்களும் வந்திருந்தனர்.

    இவர்கள் ஒவ்வொருவரிடமும் மு.க.ஸ்டாலின் நேர் காணல் நடத்தினார். மற்ற தொகுதிகளுக்கும் இன்று மாலை வரை நேர்காணல் நடைபெறுகிறது. #kanimozhi #mkstalin #parliamentelection

    பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார். #kanimozhi #admk #bjp #parliamentelection

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம், ஏ.வேலாயுதபுரம் ஆகிய இடங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    தி.மு.க.வின் ஊராட்சி சபை கூட்டம் பொதுமக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இதுபோன்ற ஊராட்சி சபை கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு, மக்களின் அனைத்து குறைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் மிரட்டலுக்கு பயந்து, தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க.வுக்கு காவடி தூக்கி வருகிறது.

    நீட் தேர்வு திணிப்பு, ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் போன்றவற்றில் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், மக்கள் விரோத போக்கை அ.தி.மு.க. அரசு கடைப்பிடித்து வருகிறது. தமிழக அரசின் தவறான கொள்கைகளால், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன.

    கிராமங்கள்தோறும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர்.

    மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு எதிர்த்த பல திட்டங்களை தற்போது அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு கூட நேர்மையாக இல்லாத அ.தி.மு.க.வினர், மக்களுக்கு எப்படி நேர்மையாக இருப்பார்கள்?. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று, சந்தர்ப்பவாத கூட்டணிக்கு பாடம் புகட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #admk #bjp #parliamentelection

    தி.மு.க. கூட்டணி தெளிவாக உள்ளது. எந்த இழுபறியும் இல்லை என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். #kanimozhi #mkstalin #vijayakanth

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கூட்டணிக்காக அவரை சந்திக்கவில்லை. அடிப்படை மனிதாபிமானத்தின் படி சந்தித்து உள்ளார். பிரதமர் வேட்பாளராக தி.மு.க. முன்வைக்கும் பெயர் ராகுல்காந்தி தான். தேர்தலுக்கு பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து மற்ற கட்சிகளுடன் கேட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால் தி.மு.க. சொல்லும் பெயர் ராகுல்காந்தியின் பெயர் தான்.


    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சுயமரியாதையுடன் வளர்த்து வந்த இயக்கத்தை தற்போது உள்ளவர்கள் மற்றவர்களுக்கு அடிபணிந்து செல்லும் நிலைக்கு மாற்றியுள்ளனர். இதனை அந்த கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் சிந்திக்க வேண்டும்.

    தி.மு.க. கூட்டணி தெளிவாக உள்ளது. எந்த இழுபறியும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. எப்படி குட்டிகரணம் போட்டு கூட்டணியை உருவாக்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தர ராஜனை போட்டியிட வைக்க பா.ஜனதா தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #kanimozhi #tamilisai #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது. தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, நேற்று மதுரையில் 18 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அவரிடம் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் பா.ஜனதாவிடம் அளிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலில் வடசென்னை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

    சிவகங்கையில் எச்.ராஜா, கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் அல்லது வானதி சீனிவாசன், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் போட்டியிட அதிகம் வாய்ப்பு உள்ளது.

    தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    ஏற்கனவே அவர் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அவர் தூத்துக்குடியில் போட்டியிடுவது உறுதி என்று மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் சமீபத்தில் அறிவித்தார்.

    இதையடுத்து அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்று மதுரை வந்த அமித்ஷாவுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

    கனிமொழியை எதிர்த்து மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனை போட்டியிட வைக்க பா.ஜனதா தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    தமிழிசை தென் சென்னையில் போட்டியிட விரும்பினார். அவருக்கு வட சென்னை தொகுதியை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க. முன்வந்தது.

    இதை அவர் ஏற்கவில்லை. இதனால் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜனதா தொகுதி பட்டியலில் வடசென்னைக்கு பதில் மதுரை தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு ஆர்.சீனிவாசனை போட்டியிட வைக்க திட்டமிட்டு தொகுதியை மாற்றித் தருமாறு அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. #kanimozhi #tamilisai #parliamentelection

    அதிமுக அரசு தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார். #kanimozhimp #admk #centralgovernment

    உடன்குடி:

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தண்டுப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ் ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது. பொருளாதார வளர்ச்சி, சிறு-குறு தொழில் பாதிப்பு, சிவகாசியில் பல லட்சம் பேர் வேலை இழப்பு என பல வழிகளில் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் பின்தங்கியதற்கு காரணமான பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்துள்ளது. இதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒரு உறுப்பினருக்கு 10 ஓட்டுகள் வீதம் சேகரிக்கவேண்டும். தமிழகத்தில் வாக்காளர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். அவர்களை வாக்குச் சாவடியில் சேர்ப்பது உங்கள் கடமை. ஆளும் கட்சியினரின் உருட்டல், மிரட்டல்களுக்கு அஞ்சாமல் களப்பணியாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhimp #admk #centralgovernment

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு, கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
    தூத்துக்குடி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
     
    இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.



    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களில் தூத்துக்குடி சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனும் ஒருவர்.

    இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்றார். அங்குள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு சென்ற கனிமொழி, சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
    சி.பி.ஐ. அமைப்பை ஏவி எதிர்க்கட்சிகளை மத்திய அரசு பழிவாங்குவதாக கூறி தர்ணா போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்றிரவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #KanimozhimeetMamata #MamataBanerjeedharna
    கொல்கத்தா:

    சி.பி.ஐ. அதிகாரிகளை அனுப்பி கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனரை கைது செய்ய முயன்ற சம்பவத்தை மையப்படுத்தி மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்றிரவில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக நடத்திவரும் ‘ஜனநாயகம் காப்போம்’ போராட்டம் 8-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்றிரவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். #KanimozhimeetMamata #MamataBanerjeedharna 
    டெல்லிக்கு நமது பிரச்சினைகள் எடுத்து சொல்ல தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று கனிமொழி எம்பி பேசினார். #kanimozhi #dmk

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியத்தில் பெரியதாழை, அழகப்பபுரம், மணிநகர், படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் ‘மக்களை சந்திப்போம் குறைகளை கேட்போம்’ என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ஜோசப், ஊராட்சி செயலாளர்கள் பெரியதாழை செல்வேந்திரன், அழகப்பபுரம் ஜெயராமன், பள்ளக்குறிச்சி பசுபதி, படுக்கப்பத்து இந்திரகாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மகளிரணி மாநில அமைப்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட திரளான கிராமத்தின் பெண்கள் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மேலும் சாத்தான்குளம் பகுதியின் வறட்சி தன்மை மாறிடவும், விவசாயம் செழித்திடவும், குடிநீர் கிடைத்திடவும் சடையனேரி கால்வாயில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கிட நிரந்தர கால்வாய் அமைக்க கோரியும், கன்னடியன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரியும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வக்கீல் வேணுகோபால், சுதாகர், ம.தி.மு.க. பிரமுகர் பலவேச பாண்டியன் உள்ளிட்டோர் எம்.பி.யிடம் வலியுறுத்தி பேசினார்கள்.

    கோரிக்கைகளையும், மனுக்களையும் பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி. கிராம மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர வில்லை, வரவில்லை என்று சொன்னார்கள். இதுபோன்ற பல நலத்திட்ட உதவிகளை இந்த அரசு நிகழ்த்தியுள்ளது. அரசின் உதவித்தொகை கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். நிச்சயமாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும். அப்பொழுது நலத்திட்டங்கள் மக்களுக்கு போய்சேர நடவடிக்கை எடுக்கப்படும்.

    மத்தியில் உள்ள மோடி அரசு பெரிய தொழில் அதிபர்களுக்கு தான் ஆதரவாக உள்ளது. ஸ்டெர்லைட்டை நடத்திட மத்திய- மாநில அரசுகள் ஆதரவாக உள்ளது. மக்களுக்கு வேலை தரக் கூடிய அரசு மத்தியிலும், மாநிலத்திலும் இல்லை.

    தமிழக மக்கள் இந்த நிலைமையை மாற்ற வேண்டும். தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் பிரச்சினைகளை சொல்ல முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. தி.மு.க.வில் பொறுப்பில் இருக்க கூடியவர்கள் ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை தெரிந்து கொண்டு நிறைவேற்றிட பாடுபட வேண்டும்.

    தமிழகத்தில் 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க போகிறது இதில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். உங்கள் கோரிக்கைகள், பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் நீங்கள் தேர்தலில் சரியாக ஓட்டு போட வேண்டும்.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தி.மு.க. ஆட்சியில் வந்தது. இன்று இந்த திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் சம்பளம் இல்லை. வேலையும் செய்யாமல் கிடப்பில் உள்ளது. இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் எந்த உதவியும் கிடைக்காது. டெல்லிக்கு நமது பிரச்சினைகள் எடுத்து சொல்ல தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். மத்தியில் தமிழ் நாட்டின் குரலை கேட்க கூடிய ஒரு ஆட்சி உருவாக வேண்டும்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஜெயசீலன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுக பெருமாள், ஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன், நகர செயலாளர் மகா இளங்கோ, ஒன்றிய பொருளாளர் வேல்துரை உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று முக்காணியில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். #kanimozhi #pmmodi #dmk
    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள முக்காணி மற்றும் பழையகாயலில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் நட்டார் முன்னிலை வகித்தார். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு குறைபாடுகளையும் எடுத்து கூறினர். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எல்லா திட்டங்களும் முடங்கி போய் உள்ளன. தி.மு.க. ஆட்சியில் 9 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெண்களுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் இப்போது வெறும் 50 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை, முதியோர் ஓய்வூதியம் ஆகிய திட்டங்கள் சரிவர நடைபெறவில்லை. இவையனைத்தும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தபடும். 

    எனவே வருகிற தேர்தல்களில் பொதுமக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வரப் போவதில்லை. மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டத்திற்கும் தி.மு.க. துணை நிற்காது. 

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

     பின்னர் பழையக்காயலில் கிளை செயலாளர் சேவியர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், தாமிரபரணி ஆறு பழையக்காயல் மற்றும் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கும் இடமான சங்குமுகத்தில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபடுவார்கள். அங்கு செல்வதற்கான சுமார் 3 கி.மீ தூரப் பாதையில் குறுக்கீடும் ஆற்றின் 2 கிளைகளில் பாலம் அமைத்து தந்து பக்தர்களின் சிரமங்களை போக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இது குறித்து ஆய்வு செய்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக உங்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். #kanimozhi #pmmodi #dmk
    ×